Archive for மார்ச் 4th, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே!

என்னடா தலைப்பு இது? என்று யோசிக்க வேண்டாம் அதற்கான மேட்டர் கீழே இருக்கு…. 

என் பதிவுகளை தொடர்ந்து வாசித்து குறுகிய காலத்தில் 1,58,000 வாக்குகளை பதிவு செய்த அனைவருக்கும் என் நன்றிகள்.

20.02.2008 அன்றைய பதிவு…

//நிலைகள் 2828 க்கும் 2727 க்கும் தான் போட்டி இதில் எந்த நிலை முதலில் உடை படுதோ அந்த பக்கம் செல்ல வேண்டியது தான். //

16.02.2008 அன்று எழுதியது….

//அடுத்த சில நாட்களில் 2600 என்ற எனது இலக்கை அடைந்த உடன் தினசரி கட்டுரையை தவிர்க்க விரும்புகிறேன்.   Trend Reversal ஏற்படும் போது மட்டும் அதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.   வேறு என்ன மாதிரியான தகவல்களை எழுதலாம் என்று யோசிக்கிறேன்.. நீங்களும் ஆலோசனை சொல்லலாம்.//

சொன்னது போலவே அண்ணன் 2600 ஐ அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி… இந்த மன நிறைவுடன் நான் கடந்த 8 மாதங்களாக ”இன்றைய சந்தையின் போக்கு என்ற தலைப்பில்”  எழுதி வந்த  கட்டுரையை இனிதே நிறைவு செய்கிறேன்.  

இந்த காரணத்தால் தான் நான் கடந்த இரண்டு நாளாக அந்த தலைப்பையும் நிப்டியின் நிலைகளையும் தவிர்த்து வந்தேன்.

விளையாட்டாக ஆரம்பித்தது பல விசயங்களை கற்றுத்தந்தது.   இது மிக சிரமமான செயல் தான் அதாவது நாம் எழுதுவதில் சரக்கு இருக்கா? இல்லையா? என்பது இரண்டாம் பட்சம்…  தினசரி காலையில் நடைபயிற்சி செய்வேன்… தினம் காலையில் வாசலை சுத்தம் செய்து கோலம் போடுவேன் என்பதையே நம்மால் தொடர்ந்து செய்ய முடிவதில்லை…  அப்படி இருக்கையில் இங்கு தினம் ஒரு பதிவு என்று எழுதி வந்தது உங்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியம் இல்லை.  அதற்கு சாட்சியே நீங்கள் இதுவரை அளித்துள்ள 1,58,000  வாக்குகள். பல நல்ல நண்பர்களை எனக்கு கிடைக்க செய்ததும், இந்த கட்டுரைகள்  தான்.  

தலைப்புகள் மாறும்… தகவல்கள் கூடும்..  மற்றபடி எழுதுவது தொடரும்… உங்களின் அனபையும் ஆதரவையும் என்றும் எதிர் பார்க்க்கிறேன்.

p.s

எனது தொழில் ரீதியான தகவல்களும் இங்கு இடம் பெற்றுள்ளது என்னை சிலர் தவறாக புரிந்து கொள்ளசெய்தது. கூடிய விரைவில் அத்தகவல்கள் இங்கு இருந்து நீக்கப்படும். 

============================================================================

நமது சந்தைகள் அமெரிக்காவை பின் தொடர்வது என்று மாறுமோ…   கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன பிறகும் நாம் அவர்களை நம்பித்தான் ஓடவேண்டுமா….

சந்தை முக்கியமான நிலைகளில் மையம் கொண்டுள்ளது…  இந்த இடத்தில் இருந்து ஒரு ஏற்றதை எதிர்ப்பார்க்கிறேன்…  (பார்த்திங்களா மேல தான் சொன்னேன் இனி இலக்கு நிர்ணயித்து செயல்படுபதில்லை என்று ஆனால் பிரசவ வைராக்கியம் போல உடனே மனக்குரங்கு இன்னொரு கிளைக்கு தாவுது).  

அதை 2-3 நாட்கள் பொறுத்திருந்து முடிவு செய்யலாம்…   

சிறு வணிகர்கள் 2-3 நாட்கள் சந்தையை வேடிக்கை பார்ப்பது நல்லது. கடந்த 2 நாட்களாக 2.30 க்கு பிறகு சந்தையை சிலர் எதிர் பார்ப்புக்கு மாறாக வழி நடத்துகிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் நம்மால் வேகமாக செயல்பட முடியாது.  கடந்த இரு நாட்களாகவே நான் அதிகம் கால்ஸ் எடுப்ப்பதில்லை… எடுக்கும் 2 வர்த்தக முடிவுகளிலும் ஒன்று நம் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல் படுகிறது. 

=============================================================================

தொழில் என்றால் என்ன? – பல மாறுபட்ட தகவல்கள்,   கண்ணோட்டங்கள் இருக்கும்  ஆனால் அனைவராலும் ஏற்று கொள்ள கூடியது…

பிசினஸ்  =  லாபத்திற்கும் / நஷ்டத்திற்கும் ஒரு சேர வாய்ப்புகளை கொண்டது.. எல்லோரும் தொழில் ஆரம்பிக்கிறார்கள். சிலர் வெற்றியடைகிறார்கள் பலர் பல காரணங்களால் தோல்வியை சந்திக்கிறார்கள்.   இந்த ரிஸ்க்கை ஆரம்பத்தில் புரிந்து கொண்டு எந்த ஒரு வணிகத்திலும் ஈடுபட்டால் நல்லது அதை விட்டு நண்பன் சொன்னான் தோழி சொன்னாள் என்று கால்வைத்து விட்டு பின்னாடி புலம்ப கூடாது. நமது வணிகமும் ஒரு தொழிலே. லாபம் மாட்டும் தான் என்றால் எல்லோரும் தொழில் துவங்கலாம்,  (அந்த மாதிரியான தொழில் கல்வியும் அரசியலும் தான்..  அதற்கும் ஒரு தேக்க நிலை வரும் வராமல் போகாது… ஊருக்கு ஒரு கல்லூரி என்று துவங்கும் போது அது ஒரு நாள் பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரும்) 

பிறந்த ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் மிகப்பெரிய சவால் – நமது  மரணம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.. அதை நம்மால் மாற்ற முடியாது ஆனால் அதை எவ்வளவு நாள் நாம் தள்ளிப்போட முடியும் என்பதே நமக்கு இருக்கும் சவால்.  அதற்கு இருக்கும் பலம் நம்முடைய போராட்ட குணமே.   சிலர் பிறந்த உடனும் 5 வயதிலும் 50 வயதிலும் என்று  எந்த வயதிலும் மரணமடைகிறார்கள். 

ஏற்கனவே நமக்கு உறுதி செய்யப்பட்ட் ஒன்றை நாம் ஏன் தேடிப்போக வேண்டும்???   உண்மையில் நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் பல வசதிகள் இருக்கிறது.  ஆனாலும் இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு நிம்மதியை தொலைத்து அலைகிறோம்.  பங்கு சந்தையில் உள்ள நமக்கு இன்று 500 / 1000 என்பது பெரிய விடயமாக தெரிவதில்லை.  பார்களிலும் / டாஸ்மார்க்கிலும் சர்வ சாதரணமாக அள்ளி வீசுகிறோம்.  ஆனால் பொது இடங்களில் நடந்து செல்லும் போது சற்று உற்று நோக்கினால் தெரியும் 5 க்கும் 10க்கும் பல மக்கள் எப்படி கஷ்ட படுகிறார்கள் என்று.   கஷ்டத்திற்காக சாவது என்று முடிவு எடுத்தால் அவன் ஆயிரம் முறையல்லவா செத்திருக்கனும். 

அண்மையில் சேலம் பஸ்நிலையத்தில் இரவு 12 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்தேன்…  வழியனுப்ப வந்த நண்பர் கூட இருந்தார்.  அந்த நேரத்தில் ஒரு பையன் தனது கையில் சப்போட்டா பழங்கள் அடங்கிய பத்து  பைகளை எடுத்து கொண்டு ஓடினான்.   பையனை அழைத்து கேட்டதில்   ஒரு பை விற்றால் 2 ரூபாய் லாபம் அவனுக்கு கிடைக்கும் என சொன்னான்.

லாஸ்ஸ்ஸ்ஸ் ஒகே போய்ட்டு போகுதுப்பா, இந்த வேகமான உலகத்தில்  நமக்கு தேவை இரண்டு நேர உணவும் நல்ல உடையும் தானே அதை செய்யமுடியாதா நம்மால்?

காதல்.. தனிமை… தொழில்… போதை…  என்று எதுவும் யாராலும் திணிக்கபடவில்லை….அனைத்தையும் நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம்…   என்னை பொறுத்தவரை எதுவும் தவறில்லை நமது மனம் நம் கட்டு பாட்டில் இருக்கும் வரை, அடுத்தவர்களுக்கு தீங்கு இழைக்காத வரை.  தப்பு சரி என்பது அவர் அவர் பார்வையை பொறுத்தது.  நான் செய்யாததை அடுத்தவன் செய்தால் அது எனக்கு தப்பா தெரியுது அதே நான் செய்யும் போது லிமிட்டா இருந்தா தப்பு இல்லைன்னு சப்பைக்கட்டு கட்டுவோம்.

அழுவதும்…. ஆர்ப்பாட்டம் செய்வதும் அழிவதும் நல்ல மனிதனுக்கு அழகல்ல… 

வாழ்க்கை வாழ்வதற்கே….. சாவதற்கு அல்ல….

இது சிலருக்கு இன்றைய சூழ்நிலையில் பயன் படும் என்பதால் எழுதினேன்.